கோவை: வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி கோவையில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் உட்பட 3 பேரிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வெரைட்டிஹால் ரோட்டை சேர்ந்தவர் வெங்கட ரமணன் ( வயது 65). வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரது வாட்ஸ்-ஆப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது.
அதில், வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்றும், முதலீடு செய்யும் பணத்திலிருந்து 1,500 சதவீதம் லாபம் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை நம்பிய வெங்கட ரமணன், 15 கட்டங்களாக ரூ.28.49 லட்சம் செலுத்தினார்; ஆனால் குறிப்பிட்டபடி அவருக்கு எவ்வித லாபத் தொகையும் கிடைக்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி (வயது 32) என்பவரது டெலிகிராமிற்கு வந்த மெசேஜ் ஒன்றில், நாங்கள் கொடுக்கும் டாஸ்க்கை முடித்துக் கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும், இதற்கு பணம் முதலீடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை நம்பிய ராஜலட்சுமி ரூ.14.14 லட்சத்தை முதலீடாகச் செலுத்தினார். ஆனால் மர்ம நபர் கூறியபடி அவருக்கு லாபத் தொகை கிடைக்கவில்லை. முதலீட்டுத் தொகையையும் திரும்பப் பெற முடியவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மூன்றாவது சம்பவம்

கோவையைச் சேர்ந்தவர் விமல்(வயது 38). இவரது வாட்ஸ்-ஆப் எண்ணிற்கு வந்த மெசேஜில், டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கி விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மோசடி பேர்வழிகள் என்று அறியாத விமல் வெவ்வேறு கட்டங்களாக ரூ.9.25 லட்சத்தை முதலீடு செய்தார். ஆனால், விமல் ஏமாற்றப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவையில் பொருளாதார ரீதியிலான சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் தளம் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
மக்கள் யாரும் இதுபோன்று வரும் மோசடி மெசேஜ்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். இச்செய்தியை கோவை வாசிகளுக்கு பகிர்ந்து உதவலாம்.