Header Top Ad
Header Top Ad

மூன்று மலைகளும்… ஆழியாறு அணையும்… புறப்படலாமா ஒரு குட்டி டூர்!

கோவை: கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான ஆழியாறு அணை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அணைகளில் ஒன்று ஆழியாறு அணை. இது பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது. ஆழி என்றால் கடல் என்று பொருள். முந்தைய காலங்களில் கடல் போல், எந்த நாளும் வற்றாமல் காட்சியளிக்கும் என்பதாலேயே ஆழி+ஆறு என்ற காரணப் பெயர் பெற்றது.

முன்னாள் முதல்வர் காமராஜர் முதல்வராக இருக்கும் போது கடந்த 1962 காலகட்டத்தில் கட்டிய அணைகளில் இதுவும் ஒன்று. வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஆழியாறு அணையானது, பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட முதல் அணையாகும்.

Advertisement

ஆனைமலையில் உற்பத்தியாகும் பல ஆறுகளில் ஒன்று தான் ஆழியாறு. தமிழகத்தின் வடமேற்கு திசையில் பாய்ந்து, கேரளாவின் பாரதபுழா ஆற்றில் கலக்கிறது. அதேபோல, ஆழியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நவமலை மின்நிலையம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. இந்த அணையானது, மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை சூழலைக் கொண்டுள்ளது.

இந்த அணை 44.19 மீட்டர் உயரம் கொண்டது. 2940 க.மீ கொள்ளளவு கொண்டது.

இந்த ஆழியாற்றை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. தென்னை, மாங்காய் மற்றும் நெல் இந்த வட்டாரத்தில் அதிகம் பயிரடப்பட்டு வருகிறது.

ஆழியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் மலைவாழ் மக்களின் ஒரு பிரிவான இரவாலர்கள் வசித்து வந்துள்ளனர். இந்த அணைக் கட்டும் போது, கிராமமும், விளை நிலங்களும் நீரில் மூழ்கியதாக வரலாறுகள் உண்டு.

தற்போது, அணையின் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறையும் போது, கல்பாலமும், கருங்கல் சாலையும் வெளியே தெரியும். இதுதான் இரவாலர்கள் வசித்தற்கான சான்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்த அணையின் முன்புறத்தில் பூங்கா, மீன் காட்சியகம் மற்றும் தீம் பார்க்குகள் அமைந்துள்ளன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக, உல்லாச படகு சவாரியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

இந்த அணையைக் கடந்து வால்பாறை சாலையில் சென்றால், குரங்கு அருவி எனப்படும் சிற்றருவி உள்ளது. இது பெரும்பாலான திரை இயக்குநர்களின் சூட்டிங் ஸ்பாட்டாக இருந்துள்ளது.

  • குரங்கு அருவி
  • டாப் சிலிப்
  • ஆனைமலை புலிகள் காப்பகம்
  • பரம்பிக்குளம் புலிகள் காப்பகம்
  • அப்பர் ரிவர் சைட்
  • மாசாணியம்மன் கோவில்
  • ஜீரோ பாயின்ட் செக் டேம்
  • காக்கா கொத்தி பாரை

உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி சாலை வழியாக கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சமத்தூர், அங்கலக்குறிச்சி மார்க்கமாக 63 கி.மீ தூரம் பயணித்து இந்த அணையைச் சென்றடையலாம்.

காந்திபுரத்திலிருந்து 69 கி.மீ தூரம் பயணித்து இந்த அணைக்குச் சென்றடையலாம்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அணைக்குச் சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது.

Recent News

Latest Articles