கோவை: கோவை சரவணம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கிய அன்னூரை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன்(32). இவர் அத்திபாளையம் பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார்.
அப்போது அங்கு அவருக்கு ஏற்கனவே அறிமுகமான சிலர் நின்றிருந்தனர். திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணு என்ற வாலிபர் அங்கிருந்த பீர் பாட்டிலால் உன்னி கிருஷ்ணனை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் விசாரித்தனர்.
இதில் முன்விரோதத்தில் உன்னி கிருஷ்ணனை தாக்கியது, அன்னூரை சேர்ந்த விஷ்ணு(27) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

