Theaters in Coimbatore: கோவையில் செயல்பட்டு வரும் 10 முக்கியமான சினிமா தியேட்டர்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தொழில் நகரான கோவையில் 15 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் சினிமா திரையரங்குகளைப் பார்த்துவிட முடியும்.
சாதாரண திரை தொடங்கி ஐ.மேக்ஸ், எபிக், என்று பல விதமான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மக்கள் தியேட்டரில் சென்று சினிமாவை ரசித்து வருகின்றனர்.
அதன்படி, கோவையில் பிரபலமான 10 தியேட்டர்களின் பட்டியலையும், அவற்றில் உள்ள வசதிகளையும் தற்போது காணலாம்.
Theaters in Coimbatore
கேஜி சினிமாஸ் (KG Cinemas)
ரேஸ்கோர்சில் அமைந்துள்ளது கே.ஜி.தியேட்டர். இதனை கோவையின் வசந்தகால தியேட்டர் என்றே கூறலாம். இந்த தியேட்டரில் படம் பார்க்காத 90s கிட்ஸ்கள் குறைவே.

இங்கு சீட் வசதி மற்றும் பார்க்கிங் வசதி உள்ளது. தியேட்டரில் சவுண்ட் சர்வீசும் அற்புதமாக இருக்கும். மொத்தம் 4 திரைகளுடன் இந்த திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. ஒரு திரையரங்கம் பணிகளால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று வரை புதுப்பட ரிலீஸ் என்றால், ரேஸ்கோர்ஸ் முழுக்க வரிசைகட்டி நிற்கும் வாகனங்களை பார்க்க முடியும்.
இணையதளம்: https://kgcinemas.com/
பிராட்வே (Broadway Mall)

கோவையில் உள்ள லக்சரி தியேட்டர் என்று இதனைக் கூறலாம். கோவை-அவினாசி சாலையில், விமான நிலையம் அருகே பிராட்வே திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. ‘எபிக்’ (EPIQ) தொழில் நுட்பத்துடன் இயங்கும் திரை வசதியுடன் இந்த திரையரங்கம் செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், இங்கு லேசர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஐ-மேக்ஸ் திரையரங்கு உள்ளது. மொத்தம் 9 திரைகள் உள்ளன. RGB புரோஜெக்ட்டர், Dolby Atmos ஸ்பீக்கருடன் இந்த EPIQ திரையரங்கம் அமைந்துள்ளது.
தமிழகத்திலேயே பெரிய திரை கொண்ட இந்த திரையரங்கத்தில், உலகத்தரத்திலான சினிமா எக்ஸ்பீரியன்ஸ் உண்டு.
தமிழகத்தில் உள்ள மூன்று ஐ மேக்ஸ் திரைகளில் இங்கிருப்பதும் ஒன்று.
இணையதளம்: https://broadwaycinemas.co.in/
PVR ஐநாக்ஸ் சினிமாஸ் (SPI Cinemas-Brook fields)
கிருஷ்ணசாமி சாலையில் அமைந்துள்ள ப்ரூக் பீல்ட்ஸ் மாலில் இந்த தியேட்டர் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 6 திரைகள் உள்ளன. இங்கு விற்கப்படும் தின்பண்டங்கள் சற்று விலை உயர்ந்ததாகவே இருக்கும்.

ஆனால், தியேட்டரின் பராமரிப்பு சூப்பராக இருக்கும். சவுண்ட் சிஸ்டங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றால், ஒருநாள் முழுவதும் அந்த மாலில் கழித்துவிட்டு வரலாம்.
செந்தில் குமரன் (Senthil Kumaran Theatre)
கே.ஜி சினிமாஸ் போலவே செந்தில்குமரனும் ஒரு வசந்தகால தியேட்டர் தான். கோவையின் மாநகரின் மையப்பகுதியான காந்திபுரத்தில் உள்ள ராம்நகரில் செந்தில் குமரன் தியேட்டர் அமைந்துள்ளது.

உள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து சென்றால், 5 நிமிடத்திற்குள் தியேட்டருக்கு சென்று விடலாம். இங்குள்ள இரு ஸ்கீரின்களிலும் நவீன ஸ்பீக்கர் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்திற்கு ஏற்ற தியேட்டராகும்.
செந்தில் குமரன் என்றதுமே 80s கிட்ஸ்களுக்கு இளமை திரும்பிவிடும். டிக்கெட்டுக்காக தியேட்டரில் இருந்து மூன்று தெருக்கள் தாண்டி நிற்கும் வரிசையும், அலப்பறைகளும் நினைவுக்கு வந்துவிடும்.
சினிபொலிஸ் (Cinepolis Coimbatore – Fun Mall)
நீண்ட இடைவெளிக்குப் பின் கோவைக்கு வந்த பெரிய திரையரங்கம் என்ற பெருமையைப் பெற்றது.

முதலில் பன் சினிமாஸ் நிர்வகித்த இந்த திரையரங்கை தற்போது Cinepolis நிர்வகிக்கிறது.
அவினாசி சாலையில் அமைந்துள்ள ஃபன் ரிபப்ளிக் மாலில் இந்த தியேட்டர் அமைந்துள்ளது. இதுவும் ப்ரூக் பீல்ட்ஸை போன்று தான். கோவை மக்களுக்கு பிடித்த மற்றும் பொழுது போக்கு இடமாக இருக்கும். இந்த திரையரங்கில் குறைந்தபட்ச விலையில் விற்பனையாகும் டிக்கெட்டுகளை அவ்வளவு சீக்கிரம் விற்பனைக்கு திறந்துவிடுவதில்லை என்பது ஏழைகளின் குமுறல்.
ஐநாக்ஸ் (Inox – Prozone mall)
கோவை-சத்தி சாலையில் உள்ள ப்ரோஜோன் மாலில் இந்த தியேட்டர் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 9 திரைகள் உள்ளன.

டிஜிட்டல் டிக்கெட்டுக்கள் பெறும் முறை என படம் பார்க்க வருபவர்களுக்கு கூடுதல் வசதிகள் உள்ளன. இங்கு விற்கப்படும் தின்பண்டங்கள் சற்று விலை உயர்வுதான்.
வெளியிலிருந்து கொண்டுவரும் திண்பண்டங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை. திரையரங்கத்திற்குள் நுழையும் போதே முழுமையாகப் பரிசோதித்துத் தான் உள்ளே அனுப்புவார்கள். ஆக, ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.
கற்பகம் சினிமாஸ் (கங்கா, யமுனா, காவேரி)
கோவையில் உள்ள கற்பகம் சினிமாஸ், மல்டிபிளக்ஸ் சினிமா அரங்குகளுக்கு பெயர் போனது. சினிமா ரசிகர்களை ரசிக்கும் ஒரு திரையரங்கம் இது.

ஒவ்வொரு முறையும் பிரபல நடிகர்களின் படங்கள் அதிகாலைக் காட்சிகளில் இங்கு வெளியாகையில், ரசிகர்கள் ஈடுபட்ட கொண்டாட்டங்கள் இங்குள்ள ஒவ்வொரு சுவர்களிலும் பதிந்திருக்கும்.
அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளுக்காக, 3.8 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது கோவை 100 அடி சாலையில் அமைந்துள்ளது. புதுப்படம் ரிலீஸ் ஆகும் போது காந்திபுரமே ஒரு ஆட்டம் கண்டுவிடும்.
பாபா சினிமாஸ் (அர்ச்சனா, தர்ச்சனா)

அர்ச்சனா, தர்ச்சனா தியேட்டர் என்று அனைவராலும் அறியப்படும் பாபா சினிமாஸ் கோவை பூமார்க்கெட் பகுதியில் அமைந்துள்ளது.
கற்பகம் சினிமாஸ்க்கு சற்றும் குறைவில்லாத கொண்டாட்டங்களை இந்த திரையரங்கிலும் பார்க்கலாம். கோவையில் உள்ள பிரபல தியேட்டர்களில் இதுவும் ஒன்று. 4K டால்பி அட்மாஸ் வசதியுடன் இந்த திரையரங்கம் செயல்பட்டு வருகிறது.
பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகையில், பூமார்க்கெட் பகுதியே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். பட்டாசுகள் சிதறும், அரங்கம் அதிரும்.
எஸ்.ஆர்.கே. மிராஜ் சினிமாஸ்
தொடங்கப்பட்ட சிறிது நாட்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மிராஜ் சினிமாஸ். கோவை ஒண்டிப்புதூர் பாலத்தின் அருகே இந்த தியேட்டர் அமைந்துள்ளது.

இந்த தியேட்டரில் 2K டிஜிட்டல் ப்ரொஜெக்டர்கள், 3D அமைப்புகள், பிரீமியம் புஷ்-பேக் இருக்கைகள், விசாலமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இங்கிருந்த தியேட்டர்களை எல்லாம் மூடிவிட்டார்களே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த சிங்காநல்லூர் காரர்களுக்கு அடித்த ஜாக்பாட் இது. இங்கும் வெளி உணவுகளுக்கு ஸ்ட்ரிக்ட் தடை. திண்டபண்டங்கள் விலையை சற்று குறைக்கலாம்.
இணையதளம்: https://www.mirajcinemas.com/
முருகன் தியேட்டர்

கோவை துடியலூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. 4K டால்பி அட்மாஸ் சவுண்ட் வசதி கொண்ட தியேட்டராகும். இருக்கைகள், விலாசமான கார் பார்க்கிங் வசதி கொண்ட தியேட்டராக இது உள்ளது. யார் வந்தாலும் போட்டிக்கு ரெடி என்பதுபோல் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் இந்த திரையரங்கம், துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் உணர்வுகளோடு கலந்த ஒரு இடம்.
இன்னும் பல பழமையான, பிரபலமான திரையரங்குகள் கோவையில் சமீப காலத்தில் மூடப்பட்டுவிட்டன.
ஒவ்வொரு தியேட்டர் குறித்த உங்கள் அனுபவங்களை கீழே கமென்டில் குறிப்பிடங்கள். நினைவுகளை அசைபோடலாம்…
மறக்காமல் உங்கள் நட்பு வட்டத்திற்கு ஷேர் செய்திடுங்கள் 




Comments are closed.