கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 15 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல், ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த சில மாதங்களாகவே கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு மிரட்டல்களை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை செய்து செல்கின்றனர். ஆனால் எந்த ஒரு பொருளும் கைப்பற்ற படாத நிலையில் அது புரளி என்பது தெரிய வருகிறது.
இந்நிலையில் இன்று மீண்டும் இமெயில் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் இங்கு செயல்பட்டு வரும் ஒவ்வொரு துறை அலுவலகங்கள், கூட்டரங்குகள், உணவு அருந்தும் இடம், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும் பணிபுரியும் அலுவலர்கள் பணியாளர்களிடம் ஏதேனும் வித்தியாசமான பொருள் காணப்பட்டதா என்றும் கேட்டறிந்து சோதனை நடத்தினர்.
இன்று வந்துள்ள மிரட்டல் இந்த வாரத்தில் மூன்றாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விரைந்து வெடிகுண்டு மிரட்டல் எடுக்கும் நபர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



