கோவை: வடவள்ளி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை, வடவள்ளியை அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் பத்ம சேஷாத்ரி பால பவன் (PSBBM) என்ற தனியார் மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பள்ளி முதல்வரின் இ-மெயில் முகவரிக்கு, உங்கள் பள்ளியின் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்று தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில், அந்த பள்ளிக்கு விரைந்த வடவள்ளி போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு காவல் துறையினர் அந்த பள்ளியில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். மேலும் பள்ளியில் உள்ள கழிப்பறைகள், மைதானம், காலி இடங்கள், ஆய்வகம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சோதனை நடத்தினர்.
சில மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பள்ளியில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் அது வெறும் புரளி என தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


 
                                    
