கோவை: கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் ரசிகர்கள் மற்றும் கட்சியினர் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.
கேப்டன் பிரபாகரன் திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியானதை தேமுதிக தொண்டர்கள், மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்..
இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
சுமார் 34 ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் அதிநவீன தொழில்நுட்பத்தினால் ஒளி ஒலி ஆகியவை மேம்படுத்தப்பட்டு இன்று மீண்டும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கோவையிலும் பல்வேறு திரையரங்குகளில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டதை தொடந்து ரசிகர்கள் மற்றும் தேமுதிகவினர் திரையரங்குகளுக்கு சென்று படத்தை மீண்டும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டதை தொடர்ந்து பல்வேறு ரசிகர்கள் மற்றும் தேமுதிகவினர் திரைப்படத்தை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். முன்னதாக திரையரங்கிற்கு சென்ற தேமுதிகவினர் கேப்டன் விஜயகாந்த் வாழ்க என்று உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.