கோவை: புகார் அளிக்க பெற்றோர்களுடன் வரும் குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அலுவலக வளாகத்தில் மாநகர குற்றப்பிரிவு, சைபர் கிரைம், துணை போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள், உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் போலீசருக்கான கூட்டுறவு வங்கி உள்ளிட்டவைகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அங்கு போலீசாருக்கு என மன மகிழ் மன்றம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கான ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் இங்கு புகார் தெரிவிக்க வரும் நிலையில், பெண்கள் சிலர் தங்கள் குழந்தைகளுடன் வருகிறார்கள்.
அவ்வாறு காத்திருக்கும் போது பெரியவர்கள் அருகிலுள்ள போலீஸ் நூலகத்திற்கு சென்று புத்தகங்கள், செய்தித்தாள்கள் படிக்கிறார்கள்.
அதே நேரத்தில் குழந்தைகள் பெற்றோர்களுடன் வளாகத்தில் உள்ள மரத்தடியில் போடப்பட்டுள்ள பெஞ்சில் அமர்ந்து இருப்பார்கள்.
இந்த நிலையில் இவ்வாறு காத்திருக்கும் பொது மக்களின் குழந்தைகள் விளையாடுவதற்காக இந்த விளையாட்டு கருவிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
விரைவில் இந்த பணிகள் நிறைவேற்றப்பட்டு பூங்கா திறக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.