கோவை: கோவையில் அம்மன் கோயிலில் கொள்ளை முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை நியூ சித்தாபுதூர் என்விஎன் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (50). இவர் அதே பகுதியில் உள்ள ஸ்ரீ பன்னாரி மாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நாகராஜன் கோயிலில் பூஜைகளை முடித்து கொண்டு கோயிலை பூட்டி வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வழக்கம் போல கோயிலை திறக்க நாகராஜன் வந்தார்.
அப்போது கோயிலின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அதிர்ஷ்டவசமாக ஏந்த பொருட்களும் கொள்ளை போகாமல் இருந்தது. பின்னர் இதுகுறித்து நாகராஜன் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை கைப்பற்றினர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
கோயிலுக்குள் புகுந்த கொள்ளையன் ஆட்கள் வரும் சத்தத்தை கேட்டு எதையும் எடுக்காமல் அங்கிருந்து தப்பி சென்று இருக்கலம் என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் நாகராஜன் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கோயிலில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையனை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

