கோவை: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக மறு ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை அனுப்பியுள்ளதாக மெட்ரோ அதிகாரி தெரிவித்துள்ளார்.
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு நிராகரித்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் எண்ணிக்கை கூறைவு, நிலம் கையகப்படுத்தல் சிக்கல்கள், திட்டச் செலவு அதிகரிப்பு, நகரின் தற்போதைய போக்குவரத்து அடர்த்தி உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்கள் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இது இரண்டு மாவட்ட மக்கள்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த இரு நகரங்களைக் காட்டிலும் கட்டமைப்பு மற்றும் மக்கள் தொகை குறைவாக உள்ள ஆக்ரா உள்ளிட்ட நகரங்களுக்கு எப்படி மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டது உட்பட பல்வேறு கேள்விகள் முன்வைக்கபப்ட்டன.
கோவை மெட்ரோ

இந்த சூழ்நிலையில், கோவை மற்றும் மதுரை ஆகிய இரு நகரங்களின் போக்குவரத்து தேவைகள், நகர விரிவாக்கம், எதிர்கால மக்கள் தொகை வளர்ச்சி, தொழில் மற்றும் கல்வி மையங்களின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மீண்டும் விரிவான மறு ஆய்வை நடத்தியுள்ளது. அந்த ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முழுமையான அறிக்கை தற்போது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை நகரில் அதிகரித்து வரும் வாகன நெரிசல், ஐ.டி. பூங்காக்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் புறநகர் பகுதிகளின் வேகமான வளர்ச்சி ஆகியவை மெட்ரோ ரயில் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
அதேபோல், மதுரை நகரிலும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு மாற்று வடிவிலான மெட்ரோ திட்டம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் சித்திக், “கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து மறு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன பதில் தரப்போகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

