கோவை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 600 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்திய தேர்தல் ஆணையம், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அண்மையில் அறிவித்தது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 15ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகளும், பல்வேறு கட்டுப்பாடுகளும் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில் தேர்தல் அமைதியாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெறுவதை உறுதி செய்ய போலீசார் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சுய பாதுகாப்பிற்காக அரசிடம் உரிய உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள், அவற்றை அருகில் உள்ள காவல் நிலையங்களில் தற்காலிகமாக ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி கோவை மாநகரில் 600 நபர்கள் துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.
துப்பாக்கிகளுக்கு விலக்கு
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகரில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர், லைசென்ஸ் பெற்று வைத்திருக்கும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகரில் 900 பேர் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.
அதில் 600 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வங்கி பாதுகாப்பு பணிக்கு துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தொழில்முறை பாதுகாப்பு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக துப்பாக்கிகளை ஒப்படைப்பதில் இருந்து விலக்கு கேட்பவர்கள் குறித்து பரிசீலனை செய்யப்படும். முறையான காரணங்கள் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
தற்போது காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்த பின்னர், இந்தத் துப்பாக்கிகள் அனைத்தும் அந்தந்த உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

