கோவை: கோவையில் ஒரே கடையில் வேலை பார்த்து வந்த டீ மாஸ்டரின் பணத்தை திருடிய போண்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
அந்த கடையிலேயே தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராவுத்தர் (வயது 45) என்பவர் போண்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
இருவரும் பேக்கரிக்கு மேலே உள்ள அறையில் ஒன்றாக தங்கி வந்தனர். இதனிடையே சம்பவத்தன்று, சந்தோஷ் தான் சிறுக சிறுக சேமித்து வைத்த 38 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது கைப்பைக்குள் வைத்து, அதனை தனது அறையில் வைத்து விட்டு வேலைக்கு சென்றார்.
இது போண்டா மாஸ்டர் ராவுத்தருக்கு தெரிந்திருக்கிறது. இதனிடையே கடையிலிருந்து அவசர அவசரமாக ராவுத்தர் தனது அறைக்கு புறப்பட்டார்.
ஆனால் அவர் மீண்டும் கடைக்கு திரும்பவில்லை. இரவு பணியை முடித்துவிட்டு சந்தோஷ் தனது அறைக்குச் சென்றார் அப்போது தனது கைப்பையில் வைத்திருந்த 38 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சந்தோஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ததில் அந்த பணத்தை ராவுத்தர் திருடியது தெரியவந்தது.
தொடர்ந்து அவரைத் தேடிப் பிடித்த போலீசார், அவர் திருடியதில் ரூ.10,100 பணத்தை மட்டும் மீட்டனர். மீதி பணத்தை ராவுத்தர் செலவு செய்து ஜாலியாக இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ராவுத்தரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

