கோவையில் விற்பனையாளர்கள் போல் வந்து நோட்டமிட்ட கொள்ளையர்கள்; திடுக்கிடும் தகவல்!

கோவை: கவண்டம்பாளையம் அடுக்குமாடிக் குடியிருப்பில் கொள்ளை நடந்தது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 13 வீடுகளின் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி, ரூ.3 லட்சம் உள்ளிட்டவை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1,848 வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் அரசு அலுவலர்கள் வசிக்கின்றனர்.

இங்கு ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகளிலும், சி3 பிளாக்கில் 10 வீடுகளிலும் என மொத்தம் 13 வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இந்த வீடுகளில் திருட்டு நடந்த விவரம் அந்தந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு நேற்று முன்தினம் மாலை தெரியவந்தது. அவர்கள் வீடுகளுக்கு சென்று பார்வையிட்டனர்.

இது தொடர்பான தகவல் அறிந்து கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வசிக்கும் நில எடுப்புப் பிரிவு வருவாய் அலுவலரின் வீட்டில் மட்டும் 30 பவுன் தங்க நகைகள் திருட்டு நடந்ததும், மற்ற வீடுகளையும் சேர்த்து மொத்தம் 56 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் பணம், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டதும், கொள்ளையர்கள் ஆட்டோவில் வந்து திருட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சம்பவம் நடைபெற்ற வீடுகளில் மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார். அதன்படி சரவணம்பட்டி, துடியலூர், கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 3 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 பேர் பேக்குடன் செல்வது பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் அந்த நபர்களின் விவரங்களை சேகரித்தனர்.

அப்போது அவர்கள் தான் கொள்ளையர்கள் என்பதும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்தும் போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அந்த கொள்ளையர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்த போலீசார் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது கொள்ளையர்கள் கோவைப்புதூரை அடுத்த குளத்துப்பாளையம், திருநகர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று அதிகாலை அங்கு சென்றனர்.

அங்கு ஒரு வீட்டில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீஸ்காரர் பார்த்திபன் என்பவரை வெட்டினார். இதில் பார்த்திபனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து கொள்ளையர்கள் அரிவாளை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை துரத்தி சென்றனர். கொள்ளையர்கள் ஆயுதத்துடன் இருந்ததால் 3 பேரையும் போலீசார் வலது காலில் சுட்டுபிடித்தனர். காயம் அடைந்த கொள்ளையர்களை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் பிடிபட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இர்பான் (48), கல்லூ ஆரிப் (60), ஆசிப் (45) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் கோவை வடக்கு துணை கமிஷனர் தேவநாதன் கோவை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

சுட்டு பிடிக்கப்பட்ட இர்பான், கல்லூ ஆரிப், ஆசிப் ஆகியோர் பகல் நேரங்களில் பாத்திரம் விற்க வருபவர்கள் போல கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து நோட்டமிட்டுள்ளனர்.

அரசு அலுவலர்கள் பகல் நேரங்களில் வீடுகளில் இருக்கமாட்டார்கள் என்பதை உறுதி செய்த அவர்கள் டிப்டாப் உடையில் வந்து பட்டபகலில் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் வேறு எங்காது கைவரிசை காட்டி உள்ளார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.