கோவை: கோவையின் முக்கிய பேருந்து நிலையங்கள் என்னென்ன? அங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக திகழ்வது நமது கோவை. தொழில், கல்வி, வணிகம் என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும் இருந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோவைக்கு வந்து தங்கி வேலை, கல்வி செய்து வருகின்றனர்.
வெளியூரிலிருந்து கோவைக்கு வரும் பயணிகள், தங்கள் இலக்கு இடத்திற்குச் செல்ல சரியான பேருந்து நிலையத்தை தேடும் நிலை ஏற்படும். அவர்களுக்கான வழிகாட்டியாக, கோவையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களின் முழு விவரம் இதோ.
காந்திபுரம் நகர பேருந்து நிலையம்

கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரப் பேருந்து நிலையம். டவுன்ஹால், உக்கடம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி உள்ளிட்ட மாநகரின் பல பகுதிகளுக்கு உள்ளூர் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. மேலும், கோவையின் புறநகரப் பகுதிகள், கோவை குற்றாலம், ஈஷா மையம், அன்னூர், கருமத்தம்பட்டி, வடவள்ளி, மருதமலை உள்ளிட்ட இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மத்திய பேருந்து நிலையம்

காந்திபுரத்தில் அமைந்துள்ள இது, திருப்பூர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் முக்கிய நிலையம். காந்திபார்க்கில் இருந்து காந்திபுரம் நோக்கி வரும் போது இடது புறத்தில் உள்ளது. மேட்டுப்பாளையத்திற்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருவள்ளுவர் பேருந்து நிலையம்

காந்திபுரம் நகர பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள இங்கிருந்து சென்னை, மைசூரு, ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட இடங்களுக்கும், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆம்னி பேருந்து நிலையம்

காந்திபுரம் ஜிபி சிக்னல் அருகே அமைந்துள்ள இங்கு, தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் சேவைகள் இயக்கப்படுகின்றன.
சிங்காநல்லூர் பேருந்து நிலையம்

மாநகரின் பல பகுதிகளுக்கான நகரப் பேருந்துகளுடன், மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, குமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு இடநிலை பேருந்துகள் இங்கிருந்து புறப்படுகின்றன. விடுமுறை தினங்களில் இங்கு பெரும் மக்கள் கூட்டம் காணப்படும்.
கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
புதிய பேருந்து நிலையம்

சாய்பாபா கோவில் அருகே அமைந்துள்ள இங்கிருந்து நீலகிரி மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
உக்கடம் பேருந்து நிலையம்

பொள்ளாச்சி, பழனி, கேரளா மற்றும் கோவை புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. தற்போது புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. கூடுதல் புதிய நிலையமும் எதிரே அமைக்கப்பட உள்ளது.

இதோடு, கோவையின் புறநகர் பகுதிகளில் சிறிய பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து அப்பகுதி சுற்றுவட்டார ஊர்களுக்கு பேருந்துகள், மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.