கோவை: பைக்கில் மகனுடன் சென்ற பெண்ணின் நகை பறித்த மர்ம நபர் மற்றும் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், நாகமராய் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி (45). இவர் கடந்த 11ம் தேதி இரவு கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு, தனது மகனுடன் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார்.
நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர், கண் இமைக்கும் நேரத்தில் பிரபாவதியின் கழுத்தில் இருந்த 8 பவுன் தங்கத் தாலி செயினை பறித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபாவதி மற்றும் அவரது மகன் சத்தம் போட்டு, திருடனை பிடிக்க முயற்சி செய்தனர்.
ஆனால் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இதுகுறித்து பிரபாவதி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற திருடனை தேடி வருகின்றனர்.
அதேபோல கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் கவியரசு (21). இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கிருந்த ஆலமரத்தின் அடியில் மறைந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல், கவியரசை திடீரென வழிமறித்தனர். அவர்கள், கவியரசை மிரட்டி அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து கவியரசு பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன், பணத்தை பறித்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.


