கோவையில் 116.29 கி.மீ ட்டருக்கு 49 வடிகால்கள் அமைக்க மாநகராட்சி திட்டம்!

கோவை:மாநகரின் வெவ்வேறு மண்டலங்களில் மொத்தம் 116.29 கி.மீ நீளமுள்ள சாலைகளில் 49 வடிகால்களை அமைக்க, தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனரகத்திடம் இருந்து 274 கோடி ரூபாய் நிதி கோரியுள்ளது கோவை மாநகராட்சி நிர்வாகம்.

கோவை மாநகரின் பல பகுதிகளில், சரியான வடிகால் வாய்க்கால்கள் இல்லாததால் மழைநீர் இன்னும் சாலைகளில் ஓடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

மேலும், மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில், மழைநீர் தேங்கி நிற்பதால் மண் சாலைகள் சேறும் சகதியுமாக மாறி, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

அதேபோல பல மழைநீர் வடிகால்களில் மண் மற்றும் குப்பைகள் அடைத்து மழை நீர் செல்லாமல் சாலையில் ஓடி வருகிறது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க மற்றும் வடிகால்களை அமைக்க, சரிசெய்ய வேண்டிய புதிய இடங்களை அடையாளம் காண, மாநகராட்சி பொறியியல் பிரிவு அனைத்து வார்டுகளிலும் விரிவான கள ஆய்வை நடத்தியது.

அதன் படி ஒரு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, முதல் கட்டமாக செயல்படுத்த அதிக ஆபத்துள்ள பகுதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த ஆரம்ப கட்டத்திற்காக, பல்வேறு மண்டலங்களில் மொத்தம் 116.29 கி.மீ நீளமுள்ள சாலைகளில் 49 வடிகால்களை அமைக்க, தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனரகத்திடம் இருந்து 274 கோடி ரூபாய் நிதி கோரியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “முதற்கட்டமாக, 116.29 கி.மீ நீளமுள்ள சாலைகளில் 49 வடிகால்களை அமைக்க, இடங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அரசிடம் ரூ.274 கோடி நிதி கோரியுள்ளோம். ஒப்புதல் அளிக்கப்பட்டதும், பணிகள் தொடங்கப்படும்.

மழைக்காலங்களில் வெள்ளம் மற்றும் நீர் தேக்கத்தைத் தடுக்க, 100 வார்டுகளில் மழைநீர் வடிகாலை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் கோவை மாநகராட்சி ரூ.2,200 கோடி மதிப்பிலான திட்டத்தை வகுத்துள்ளது” என்று அதிகாரிகள் கூறினர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.