கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக வசதி; மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்!

கோவை: கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக விளையாட்டுத்திடல் அமைப்பது குறித்து மா நகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் இன்று நடைபெற்றது.

இதற்கு மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இன்று நடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மொத்தம் 105 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் குறிப்பாக கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக பிரதியாக விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனை ஏற்று 33 வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக விளையாட்டுத்திடல் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதை நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்ப இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இதேபோல் காந்திபுரம் – நஞ்சப்பா சாலையில் மத்திய சிறைச்சாலை நுழைவு வாயில் முன்பு இருந்து பார்க்கேட் வரை நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மின்கம்பங்கள் இல்லாததால் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் சாலையில் நடந்து செல்லும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே இங்கு மின் கம்பங்களுடன் கூடிய தெரு விளக்குகள் அமைக்க ரூ.24.15 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் உள்ள தெருவிளக்கு பராமரிப்பு ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Recent News

Video

Join WhatsApp