ரயில் இருந்து பச்சிளம் குழந்தையை தூக்கி வீசிய தந்தை- அதிரடி தீர்ப்பு வழங்கிய கோவை நீதிமன்றம்…

கோவை: பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது கோவை சிறப்பு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தாயை சந்தேகப்பட்டு, பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலிலிருந்து தூக்கி வீசிய கொடூர சம்பவத்திற்கும், பெண்ணை ஏமாற்றியதற்கும்,குற்றவாளியான தந்தைக்கு கோவை மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் மாரிச்செல்வம். 2021 ஆம் ஆண்டு கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு 2022 மே மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்த சில நாட்களில் தம்பதியினர் குழந்தையுடன் ரயில் மூலம் திருநெல்வேலியில் இருந்து கோவைக்கு பயணம் செய்தனர்.

இந்த பயணத்தின் போது, மாரி செல்வத்திற்கு ஏற்கனவே திருமணம் ஆகியது குறித்து மனைவி கவிதா கேட்டுள்ளார். அப்போது மனைவி மீது மாரிச்செல்வம் சந்தேகம் கொண்டதால் தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மனைவி ரயிலில் தூங்கியிருந்தபோது, பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை திண்டுக்கல் அருகே ரயிலிலிருந்து தூக்கி வீசி கொன்றுள்ளார்.

பின்னர் மனைவி கவிதா விழித்தபோது குழந்தை காணாமல் போனதை கவனித்துள்ளார். அதற்கு மாரிச்செல்வம் தான் ரயிலில் இருந்து குழந்தையை தூக்கி எறிந்ததாக கூறியதுடன், “இது குறித்து வெளியே சொன்னால் உன்னையும் கொலை செய்து விடுவேன்” என மிரட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மனைவியை கோவைக்கு அழைத்து வந்து ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். அந்த ஹோட்டல் அறையில் மாரிச்செல்வம் செல்போனை விட்டு வெளியேறிய நிலையில் பின்னர் மனைவி கவிதா,அந்த செல்போன் மூலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார், ஹோட்டல் அறையை உடைத்து மனைவி கவிதாவை மீட்டனர்.

Advertisement

அதனைத் தொடர்ந்து ஹோட்டல் அறைக்கு வந்த மாரிச்செல்வத்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், குழந்தையை ரயிலிலிருந்து தூக்கி வீசிய அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

இந்த வழக்கு கோவை சிறப்பு மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.நீண்ட விசாரணைக்குப் பிறகு, ஏற்கனவே திருமணம் ஆகியதை மறைத்து பெண்ணை ஏமாற்றியதற்கும் மற்றும் குழந்தையை கொலை செய்ததற்கும்,நீதிபதி சுந்தரராஜ், குற்றவாளி மாரிச்செல்வம் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்து, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தார் .

Recent News