கோவை: கோவையைச் சேர்ந்த இளம் பெண்ணின் குடலில் உருவான உலகின் மூன்றாவது பெரிய பாலிப் கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
குடலுக்குள் உருவாகும் கேன்சரின் ஆரம்ப கட்டிகள் பாலிப் (Polyp) என்று அழைக்கப்படுகிறது. சமீப காலமாக பலருக்கு இக்கட்டி தோன்றி பாதிப்பு ஏற்படுகிறது.
இதனிடையே கோவையைச் சேர்ந்த 29 வயது இளம் பெண் ஒருவரின் பெருங்குடலில் உருவாகி இருந்த பெரிய அளவிலான பாலிப் கட்டியை சிங்காநல்லூர் VGM மருத்துவமனை மருத்துவர்கள் எண்டோஸ்கோபி முறையில், சுமார் 7 மணி நேர சிகிச்சைக்குப் பின் போராடி அகற்றியுள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையின் மூலம் இளம் பெண்ணின் பெருங்குடலில் இருந்து 8 செ.மீ., அளவிலான பாலிப் கட்டி அகற்றப்பட்டுள்ளது.
தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்ட பாலிப் கட்டிகளிலேயே இது தான் மூன்றாவது பெரிய கட்டி என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வி.ஜி.எம் மருத்துவர்கள் கூறியதாவது:-

சம்மந்தப்பட்ட பெண்ணிற்கு பாலிப் கட்டி கேன்சர் கட்டியாக மாற்றமடையாத நிலையில், அதனை எண்டோஸ்கோபி முறையில் அகற்றியுள்ளோம்.
பெருங்குடல் தொற்று நோய் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இது 20% உயர்ந்துள்ளது, இதனால் பெண்களை விட ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
மலத்தில் ஏற்படும் மாற்றம், மலத்துவாரத்தில் இரத்தம் வெளியேறுதல், அனீமியா, வயிற்று வலி, ஒவ்வாமை, டைரியா, அதிகப்படியான வாந்தி ஆகியவை இதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால் பெருங்குடல் தொற்று நோயைத் தடுக்கலாம். மரபணு மற்றும் வாழ்க்கை முறையைச் சார்ந்து இக்கட்டிகள் உருவாகின்றன.
இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.