கோவை: கோவையில் சேற்றில் சிக்கிய பெண் யானை மீட்கப்பட்ட நிலையில், வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடையில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த பெண் யானை ஒன்று, அங்கிருந்த சேற்றில் சிக்கிக் கொண்டது. அந்த யானையால் சேற்றில் இருந்து வெளியே செல்ல முடியவில்லை.
மீண்டும் மீண்டும் கீழே விழுந்து வலியால் பிளிறிய யானையைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அங்கு மண் சரிவுகள் அமைத்து யானையை மீட்டனர்.
தொடர்ந்து அந்த யானையின் உடல் நலம் கண்காணிக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டன. மேலும், அந்த பெண் யானைக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
இதனிடையே யானையின் உடல் நலம் தேறிய நிலையில், அந்த யானை போலாம்பட்டி கரடிமடை சுற்று, அய்யாசாமி கோயில் வனப் பகுதியில் நல்ல நிலையில் திருப்பி அனுப்பப்பட்டது.

