கோவை: பேரிடர் காலங்களில் மாடியில் சிக்கியுள்ளவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து கோவையில் தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நடைபெற்றது.
கோவையில் பேரிடர் காலங்களில் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக குளம் போன்ற நீர் நிலைகளில் பேரிடர் மீட்புப் பயிற்சி, மருத்துவமனைகளில் தீ தடுப்பு ஒத்திகை, மற்றும் உயர் கட்டடங்களில் சிக்கியவர்களை மீட்கும் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் தீ விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இது போன்ற அசம்பாவிதங்களில் சேதம் ஏற்படாமல் தவிர்க்க தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு விதமான ஒத்திகை நடத்தப்பட்டு வருகின்றன.
ஒத்திகை

இதன் ஒரு பகுதியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறைகள் சார்பாக பீளமேடு டைடல் பார்க் வளாகத்தில் நிறுவன ஊழியர்கள் பயன்பெறும் வகையில் இன்று ஒத்திகை நடைபெற்றது.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி தலைமையில், பீளமேடு நிலைய அலுவலர் ரவிக்குமார், பால சுப்பிரமணியன், சிவக்குமார், முகமது சலீம் முன்னிலையில் தீயணைப்பு துறை வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.
அப்போது பல மாடி உயர கட்டடங்களில் சிக்கியவர்களை ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் மீட்பது எப்படி? கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அணைக்கும் முறைகள்? குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

