கோவை: கோவையில் இரவு நேர பைக், கார் ரேஸ்களை தடுக்க, உக்கடம் உள்ளிட்ட முக்கிய மேம்பாலங்கள் இரவு 11 மணிக்குப் பிறகு தற்காலிகமாக மூடப்படுகின்றன.
கோவை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், உக்கடம், திருச்சிரோடு, அவிநாசி ரோடுகளில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலங்களின் காரணமாக மாநகரில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.
இந்நிலையில், உக்கடம் மேம்பாலம், ஜி.டி நாயுடு மேம்பாலம் மற்றும் திருச்சிரோடு மேம்பாலங்களில் இரவு நேரங்களில் இளைஞர்கள், சிறுவர்கள் பைக், கார் ரேஸ்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் ரீல்ஸ் செய்ய சிலர் மேம்பாலங்களில் பைக் சாகசம் செய்கின்றனர் என போலீசாருக்கு புகார்கள் வந்தது.
இவர்கள் நள்ளிரவு நேரங்களில் மேம்பாலத்தின் மீது மிக அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் விபத்து மற்றும் உயிரிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மேம்பாலங்களில் பைக், கார் ரேஸ் செல்வதை தடுக்கும் வகையில், இரவு 11 மணிக்கு மேல் அனைத்து மேம்பாலங்களிலும் போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்து மூடியுள்ளனர்.
மேலும், இந்த தடுப்புகள் காலையில் அகற்றப்பட்டு வழக்கம் போல் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

