கோவை: கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் உள்ள வெள்ளிப்பொருட்கள் கடையில் ஏசி பகுதியை துளைத்து புகுந்த மர்ம நபர்கள், வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் வெள்ளிப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இரு தளங்களை கொண்ட இந்த கடையில் ஏராளமான வெள்ளிப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த கடையை டாடாபாத் சிவானந்தா காலனியை சேர்ந்த காதர் கோச்சர் (41) என்பவர் நடத்தி வருகிறார்.
வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர். நேற்று காலை காதர் கோச்சர் மற்றும் ஊழியர்கள் கடையை திறந்தனர்.
அப்போது விமல் என்ற ஊழியர் கடையின் 2-வது தளத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு கப்போர்டில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் உடனடியாக கடை உரிமையாளர் காதர் கோச்சரிடம் தெரிவித்தார். பின்னர் அவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது கொள்ளையர்கள், ஏசி இயந்திரம் வைக்கப்பட்டிருந்த பகுதியை துளைத்து அதன் வழியாக கடைக்குள் நுழைந்து வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் 2 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அவர்களின் உருவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளின் அடிப்படையில் ஆசாமிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

