காமுகர்களை அடையாளம் காண்பித்தார் மாணவி!

கோவை: கோவையில் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மத்திய சிறையில் நீதிபதி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது மாணவி மற்றும் அவரது காதலன் ஆகியோர், கைது செய்யப்பட்ட 3 வாலிபர்களையும் உறுதி செய்தனர்.

கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

ஒண்டிப்புதூரைச் சேர்ந்த தனது நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, ஒரே மொபட்டில் வந்த அந்த 3 வாலிபர்கள் மாணவியின் ஆண் நண்பரை அரிவாளால் வெட்டி மாணவியை அங்கிருந்து இழுத்துச் சென்று கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் சகோதரர்கள் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), இவர்களது உறவினர் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோர் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்.

அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது கோவை ஜே.எம். 2 நீதிபதி அப்துல் ரகுமான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரிடம் நேரில் விசாரணை நடத்தி கடந்த 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து, கால்களில் குண்டு அடிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேரும் அடுத்தடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல மாணவியும், அவரது காதலனும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

இதற்கிடையே பெண் சமந்தப்பட்ட வழக்கு என்பதால் வழக்கு விசாரணையானது ஜே.எம். 2 கோர்ட்டில் இருந்து கூடுதல் மகிளா கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சிந்து வழக்கை விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் வாலிபர்கள் கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரின் நீதிமன்ற காவல் 19ம் தேதி முடிவடைந்ததையடுத்து பீளமேடு போலீசார் 3 பேரையும் மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி சிந்து 3 பேரையும் டிசம்பர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

மேலும், அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் மாவட்ட முதன்னை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார், ஜே.எம். 1 நீதிபதி தமிழ் இனியன் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்த அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி, கோவை மத்திய சிறையில் ஜே.எம். 1 நீதிபதி தமிழ் இனியன் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. மத்திய சிறையில், ஒரு வழி கண்ணாடி வழியாக விதிமுறைகளின்படி அடையாள அணிவகுப்பு நடந்தது.

அப்போது கூட்டு பாலியல் வழக்கில் கைதான 3 பேருடன் மேலும் சிலரை வரிசையில் நிற்க வைத்து அடையாளம் காணும்படி நீதிபதி பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது காதலனிடம் கூறினார்.

இதையடுத்து முதலில் பாதிக்கப்பட்ட பெண், பின்னர் அவரது காதலன் பார்த்து 3 வாலிபர்களை அடையாளம் கண்டு உறுதி செய்தனர். தொடர்ந்து பெண் மற்றும் அவரது காதலனிடம் நீதிபதி தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். விசாரணை ஆவணங்களை நீதிபதி தமிழ் இனியன் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.