கோவை: வீடியோ எடுக்க உதவுவதாக கோவையில் சிறுமியிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் தனலட்சுமி புரம் பகுதியை சேர்ந்தவர் முகுந்தன் (42). இவர் தனது 14 வயது மகளுடன் வீட்டின் அருகே உள்ள காலி மைதானத்தில் நின்றிருந்தர்.
அப்போது அங்கு வந்த மயிலை வீடியோ எடுப்பதற்காக முகுந்தனின் மகள் அவரிடம் இருந்து செல்போனை வாங்கினார்.
பின்னர் தூரத்தில் இருந்த மயில்களை வீடியோ எடுத்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் சிறுமியிடம் மயிலை வீடியோ எடுக்க உதவுவதாக செல்போனை வாங்கி உள்ளார். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் செல்போனுடன் தப்பி சென்றார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த முகுந்தன் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் சிறுமியிடம் செல்போனை பறித்து தப்பி சென்றது அதே பகுதியை சேர்ந்த முத்துபாண்டி (36) என்பது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் முத்துபாண்டியை கைது செய்து கெல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.