கோவை: சைரன் சத்தத்தில் சிதறி ஓடும் காட்டு பன்றிக் கூட்டத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள குப்பனூர் பகுதியில், வனத்தில் இருந்து வெளியேறிய நூற்றுக் கணக்கான காட்டுப் பன்றிகளை விரட்ட வனத்துறையினர் ஜிப் சைரன் (Jeep Siren) ஒலித்து விரட்டி அடித்தனர்.
மதுக்கரை வனச்சரகத்தை ஒட்டி உள்ள குப்பனூர் கிராமத்தின் விளை நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வனத்துறையினரிடம் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு நூற்றுக்கணக்கான காட்டுப் பன்றிகள் கூட்டமாக வனப்பகுதியில் இருந்து வந்து உள்ளன. அப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் காட்டுப்பன்றி கூட்டத்தைக் கண்டு ஜிப்பின் சைரன் ஒலியை ஒலிக்கச் செய்தனர்.
மிரண்டு ஓட்டம்
வனத்துறை வாகனத்தின் தொடர் சைரன் சத்தம் மற்றும் இன்ஜின் இரைச்சலைக் கேட்டு மிரண்ட பன்றிக் கூட்டம், விளைநிலங்களை விட்டு ஓடத் தொடங்கியது. வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஜிப்பில் பின்தொடர்ந்து சென்று, சைரன் ஒலியின் மூலம் அந்தப் பன்றிக் கூட்டத்தை மீண்டும் அடர்ந்த வனப்பகுதியை நோக்கித் திசை திருப்பினர்.
ஒரே நேரத்தில் இவ்வளவு பன்றிகள் கூட்டத்தை வனத்துறையினர் விரட்டிய செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகிய உள்ளது. தொடர்ந்து விளை நிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

