கோவை: இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இனிமேல் வழக்குகளை இ-பைலிங்’ முறையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என கடந்த டிசம்பர் 1ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு தீர்மானத்தின் படி, இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இன்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுதீஷ், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது அவர்கள், இ ஃபைலிங் முறையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், இதனை சரி செய்யும் வரை கட்டாய இஃபைலிங் முறையை திரும்ப பெற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இ-பைலிங் முறையை கண்டித்து கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை 4 நாட்களுக்கு கோவையில் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், “உச்ச நீதீமன்றம் இந்த முறையை தீடீர் என்று அமலுக்கு கொண்டுவந்துள்ளதால் பல சிக்கல்கள் உள்ளது. இந்த இ- பைலிங்க் முறையில் கட்டமைப்பு வசதிகள் இல்லை. அப்லோடு செய்தாலும், டவுன்லோடு செய்ய முடியாது. மேலும் இங்க்குள்ள அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகளும் வழங்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி குறிப்பிட்ட பெட்டிஷனின் நம்பர் தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், வழக்குகள் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. எவ்விதமான பயிற்சியும் அளிக்காமல் உடனடியாக இதை செயல்படுத்துவதால் நடைமுறையில் பல சிக்கல் உருவாகும்.
இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோர்ட் பணிகளில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளோம். கீழமை நீதிமன்றங்களில் கட்டமைப்பு வசதி, பயிற்சி அளித்த பின்னரே இந்த முறையை செயல்படுத்த வேண்டும்.” என்றனர்.


