கோவை: வேளாண்துறை சார்பில் கோவையில் நடைபெற்ற சிறுதானிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட வேளாண் துறை சார்பில் சிறுதானிய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் துணைவேந்தர் சுப்பிரமணியன், பல்கலை இயக்குநர் முருகன், கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்ச் செல்வி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் சிறுதானியங்கள் மூலம் செய்யப்படும் மதிப்புகூட்டு பொருட்கள், பயிர் வளர்ச்சிக்கான உரம், நவீன உழவு இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
கருத்தரங்கில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுப்பிரமணியன் பேசியதாவது:-
நாம் உணவுப் பாதுகாப்பில் தன்னிறைவு பெற்றுவிட்டோம். ஆனால் இன்னும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் தன்னிறைவு பெறவில்லை. தென் மாநிலங்கள் என்றால் நெல், வடமாநிலம் என்றால் கோதுமை என்றே வழக்கமாக கூறப்படுகிறது.
இங்கு சிறுதானியங்களின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. பாரம்பரிய நெல்லில் 12% வரை புரதம் உள்ளது. அரிசியில் சத்து குறைவாக உள்ளது என்று கூறவில்லை. ஆனால், ரத்த சர்க்கரை அளவை நிர்ணயிப்பதில் அரிசி முக்கியப் பங்கு வகிக்கிறது.

அரிசியில் மாவுச்சத்து உள்ளது போலவே சிறுதானியத்திலும் உள்ளது. ஆனால் சிறுதானியங்களில் கிளைசிமிக் இண்டெக்ஸ் அளவு அரிசியை விட குறைவாக உள்ளது. இதனை எடுத்துக் கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை சமமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
சிறுதானியங்களில் சத்துகள்
மேலும், சிறுதானியங்களில் இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட சத்துகளும் அதிகம் உள்ளன. நாம் இவற்றை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் சிறுதானியங்கள் காக்கும் என்றார்.
இதனைத் தொடர்ந்து, சிறுதானியங்கள் பயிர் முறை, பயன்பாடு, மதிப்பு கூட்டு பொருட்களாக தயாரித்தல் குறித்து துணை மற்றும் உதவி இயக்குநர்கள் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுடன் சிறுதானியங்கள் துறை பேராசிரியர் ஐயனார், வேளாண் அறிவியல் மையம் விஞ்ஞானி கோமதி, வேளாண்மை துணை இயக்குநர் விஜயகல்பனா, வேளாண்மை துணை இயக்குநர் மீனாம்பிகை, உதவி இயக்குநர் சக்திவேல், துணை இயக்குநர் நிர்மலா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

