கோவை: கோவை கங்கா மருத்துவமனையின் செவிலியர் மாணவிகள் 100 பேர் திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
துடியலூர் அருகே வட்டமலைப்பாளையம் பகுதியில் கங்கா மருத்துவமனையின் செவிலியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர்.
விடுதியில் இரவில் வழங்கப்பட்ட உணவை அருந்திய சிறிது நேரத்திலேயே, பல மாணவிகளுக்குத் திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு உள்ளது.
பரபரப்பு
பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியதால், விடுதி வளாகமே திக்குமுக்காடிப் போனது.
பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் அதே பகுதியில் உள்ள கங்கா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
இதில் சில மாணவிகளின் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர்கள் சாய்பாபா காலனியில் உள்ள கங்கா தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காட்சிகள் அடங்கிய செல்போன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவிகளுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு உடனடியாகக் கவனிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின் அனைவரும் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.

