கோவை: தொழிலதிபர்களை மிரட்டி 4.800 கிலோ தங்கம், நிலம் மோசடி செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதான வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதில் உயர் அதிகாரிகள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கவுண்டம்பாளையத்தை அடுத்த இடையர்பாளையத்தை சேர்ந்தவர் பாலவெங்கடேஷ் (50). இவர் சாய்பாபா காலனி என்எஸ்ஆர் ரோடு, பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தங்க நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு தொழில் ரீதியாக கோவை, சொக்கம்புதூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் அறிமுகமாகி உள்ளார். அப்போது அவர் நடத்தி வந்த தங்க சீட்டில் பாலவெங்கடேஷ் இணைந்துள்ளார்.
அதில் பாலவெங்கடேசுக்கு 9 கிலோ 500 கிராம் மற்றும் டெபாசிட் தங்கம் 1 கிலோ 677 கிராம் 863 மில்லி முத்துக்குமார் தரவேண்டியிருந்தது.
ஆனால் அதனைத் தராமல் முத்துக்குமார் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து பாலவெங்கடேஷ் எனக்கு சேரவேண்டிய தங்கத்தை மீட்டு தரவேண்டி கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.
இதற்கிடையே, ஏமாற்றிவர் மீது நடவடிக்கை எடுக்காமல், கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி காலை இடையர்பாளையத்தில் உள்ள பாலவெங்கடேஷ் வீட்டிற்கு அப்போதைய செல்வபுரம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் 2 பெண் போலீசார் உட்பட சுமார் 10க்கும் மேற்பட்ட போலீசார் 2 வாகனங்களில் சென்றுள்ளனர்.
அப்போது இன்ஸ்பெக்டர் செல்வராஜிடம், பாலவெங்கடேஷ் எதற்காக வந்துள்ளீர்கள் என கேட்டபோது முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அதன் பேரில் கைது மற்றும் வீட்டை சோதனை செய்ய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்து அறையில் பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 500 மற்றும் தங்க மோதிரங்கள் 25 கிராம், கைசெயின் 40.250 கிராம், கழுத்து செயின் டாலர் உடன் 71.900 கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டார் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.
பின்னர் வீட்டிலிருந்து சாய்பாபா காலனியில் உள்ள பாலவெங்கடேஷ் கடைக்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் சென்ற போலீசார் கடையில் விற்பணைக்காக வைத்திருந்த சுமார் 3 கிலோ 600 கிராம் தங்க நகைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து பாலவெங்கடேசை செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற இன்ஸ்பெக்டர் செல்வராஜ், அவரை கைது செய்ய போவதாக தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து இன்ஸ்பெக்டர் செல்வராஜ், பாலவெங்கடேசிடம் உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன், நீ முத்துக்குமாருடன் சமாதனமாக சென்று அவருக்கு செட்டில்மெண்ட் செய்தால் உன்னை விட்டு விடுகிறேன் என கூறியுள்ளார்.
மேலும், ஈரோடு மாவட்டம், தாளவாடி, மல்லன்குழி பகுதியில் உள்ள பாலவெங்கடேசின் 50 ஏக்கர் விவசாய பூமியை முத்துக்குமாருக்கு கிரையம் செய்து கொடுக்க செட்டில்மெண்ட் பேசியுள்ளார்.
வேறு வழியின்றி பாலவெங்கடேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர் என்று கூறி வந்த அம்பி ஆகியோர் ரூ.15 கோடிக்கு மேல் இருக்கும் பாலவெங்கடேசின் சொத்தை கையொப்பம்
பெற்றுக்கொண்டனர். பின்னர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை யாரிடமும் தெரிவிக்ககூடாது என மிரட்டி அவரை வெளியேற்றினார்.
அதேபோல கோவை தொழிலதிபரான சோமசுந்தரம் (58) என்பவரை மிரட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் முத்துக்குமார் 1 கிலோ 200 கிராம் தங்கத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சோமசுந்தரம் மற்றும் பாலவெங்கடேஷ் ஆகியோர் அளித்த புகாரின் மீது மாநகர போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற மூலம் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் அப்போதைய இன்ஸ்பெக்டரும், தற்போது திருப்பூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் செல்வராஜ் மற்றும் நகை வியாபாரி முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், இந்த வழக்கில் மேலும், சில போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்போதைய கோவை மாநகர கமிஷனர் சரவண சுந்தர் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என டிஜிபி வெங்கடராமனிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து டிஜிபி, இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் முத்துக்குமார் மீதான தங்க நகை மோசடி வழக்கை கோவை சரக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதனால் இந்த வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது. இதில் சில உயர் போலீஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.


Who is cbcid….he is also a govt agent