கோவை: கோவையில் மினி சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு பைப்புகள் சாலையில் திடீரென சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை மாநகரின் முக்கிய சாலைகளுள் ஒன்றாக திருச்சி சாலை உள்ளது. தொழில் நகரமான கோவையில், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை எப்பொழுதும் அதிகமாக இருக்கும்.
அவ்வாறே இன்று பிற்பகல் திருச்சி சாலையில் ரெயின்போ ஸ்டாப் அருகே ஒரு மினி (பொலிரோ பிக் அப்) சரக்கு வாகனம் இரும்பு பைப்புகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
வாகனத்தில் போதிய பாதுகாப்புகள் இன்றி அடுக்கி வைக்கப்பட்டு இருந்த இரும்பு பைப்புகள் திடீரென சாலையில் சரிந்து விழுந்தன. பைப்புகள் விழுவதை கவனித்த ஓட்டுனர் உடனடியாக பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்தினார்.
பைப்புகள் சரிந்த போது அந்த வாகனத்தின் அருகே மற்றும் முன்னால் யாரும் இல்லை என்பதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.
தங்கள் வாகனத்தின் கொள்ளளவு மற்றும் நீளத்தை விட அதிக எடை மற்றும் நீளத்தில் அபாயகரமான வகையில் பொருட்களை எடுத்துச் செல்லும் இதுபோன்ற டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதேபகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற விபத்து நடைபெற்றது. கவுண்டம்பாளையம் அருகேயும் இதேபோன்று ஒரு விபத்து நடைபெற்று பஸ் கண்ணாடி உடைந்தது.
கோவையில் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் இதுபோன்ற விதிமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில் இனியும் போலீசார் மவுனம் காக்கக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

