கோவை: சிங்காநல்லூர் கொள்ளை சம்பவத்தில் முன்னாள் ஊழியருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் (24). இவரது வீடு மத்திய மண்டல அலுவலகம் அருகே உள்ளது. அதன் அருகிலேயே அவர் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவில் அவர் கடையை பூட்டி விட்டு மகா சிவராத்திரி விழாவுக்கு சென்றார். பின்னர் அதிகாலையில் வீடு திரும்பி வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 48 பவுன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 60 லட்சம் ஆகும்.
உடனே இது குறித்து ராஜேஷ் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
போலீஸ் விசாரணை

அதில் இரவு 10.45 மணி அளவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த வாலிபர் கொள்ளையை அரங்கேற்றி தப்பிச் சென்றது தெரியவந்தது. தீவிர விசாரணையில் அந்த வாலிபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே கடையில் வேலை கேட்டு வந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவர் வேலை கேட்டு வந்ததாகவும், வேலை குறித்து பிறகு தகவல் கூறி அனுப்பியதாக ராஜேஷ் தெரிவித்தார்.
மேலும் கடையில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் ஒருவருக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

