கோவை: கோவை தெற்கு தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவை தெற்கு தொகுதி தமிழக வெற்றி கழகம் கட்சியின் வேட்பாளர் செந்தில்குமார் சித்தாபுதூர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக அண்ணா சிலை சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதே நேரத்தில் அதன் அருகிலேயே உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரின் சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை.
தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு 100 மீட்டர் முன்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்திலும் காரிலும் மேளதாளங்கள் முழங்க தவெக கட்சி துண்டுகளை சுழற்றியவாறு ஊர்வலமாக வருகை புரிந்தனர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் ஆகியோர் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு வெற்றி வாய்ப்பு அருமையாக உள்ளது அமோகமாக 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் அதில் எந்த ஒரு குறையும் இல்லை என்றார்.
கோவை தெற்கு தொகுதிக்கு நீங்கள் புதுமுகம் அப்படி இருக்கும் பொழுது மக்களின் ஆதரவு எந்த அளவு உள்ளது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விஜயின் முகம் உள்ளவரை புதுமுகம் பழைய முகம் என்று இல்லை அனைத்துமே புதுமுகம் தான் என பதில் அளித்தார்.
பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மட்டும் மாலை அணிவித்து விட்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரின் சிலைக்கும் மாலை அணிவிக்காதது தொடர்பான கேள்விக்கு, நேரமின்மை காரணமாக அண்ணாவின் ஒரே சிலைக்கு மட்டும் மாலை அணிவித்து விட்டு வந்து விட்டேன் என பதிலளித்தார்.

