கோவை: நடுரோட்டில் மதுகுடித்தை கண்டித்த போலீஸ்காரரை தாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் செந்தட்டி காளை பாண்டியன் (35). இவர் கடந்த 2ம் தேதி இரவு மற்றொரு போலீஸ்காரர் வல்லரசு என்பவரும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது நள்ளிரவில் சரவணம்பட்டி, துடியலூர் சாலையில் நடுரோட்டில் 3 வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர். அதனைப் பார்த்த போலீசார் அவர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர்.
அதில் 2 பேர் அங்கிருந்து சென்று விட்டனர். ஒரு வாலிபர் மட்டும் போதையில் பைக்கை ஓட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்.




மேலும், அவர் வைத்திருந்த வாகனத்தில் முன்புறத்தில் நெம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. இதனால் போலீசார் அவரிடம் வாகனத்தின் ஆவணங்களைக் கேட்டுள்ளனர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதுகுறித்து செந்தட்டி காளை பாண்டியன் இரவு ரோந்து அதிகாரியான சிறப்பு எஸ் ஐ தர்மநாதன் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதற்கு அவர், அந்த வாலிபர் போதையில் சென்று விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால் பைக்கை காவல் நிலையம் கொண்டு போய் வைக்கும்படியும், அவரை அனுப்பி விட்டு காலையில் போலீஸ் நிலையம் வந்து ஆவணங்களைக் காட்டி வாகனத்தைப் பெற்றுச் செல்லும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து வல்லரசு அந்த வாலிபரின் பைக்கை காவல் நிலையம் சென்றார். பின்னர் செந்தட்டி காளை பாண்டியன் ரோந்து பைக்கை எடுத்து கொண்டு புறப்பட்டார். அப்போது அவரை தடுத்து அந்த வாலிபர் போலீஸ் பைக்கின் சாவியை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
செந்தட்டி காளை பாண்டியன் அவரை எச்சரித்து வீட்டிற்கு செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் செந்தட்டி காளை பாண்டியனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த கார் டிரைவர் ஒருவர் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி போலீஸ்காரரை மீட்டார். பின்னர் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். இதுகுறித்து செந்தட்டி காளை பாண்டியன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் போலீஸ்காரர் செந்தட்டி காளை பாண்டியனை தாக்கியது பொள்ளாச்சியை சேர்ந்த சஞ்சய் (21) என்பதும், அவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரில் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் சஞ்சயை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


