கோவை: கோபி-சுதாகர் பதிவிட்டுள்ள யூடியூப் வீடியோ தொடர்பாக கோவை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் சமீபத்தில் “சொசைட்டி பாவங்கள்” என்ற பெயரில் விடியோ ஒன்றை வெளியிட்டனர்.
அந்த வீடியோவில், சமூகத்தில் ஜாதிய அடக்குமுறைகள், சமூகம் அதனை ஒருவரிடம் இருந்து ஒருவரிடம் எப்படி புகுத்துகிறது? இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது உள்ளிட்ட கருப்பொருட்கள் இடம்பெற்றன.
குறிப்பாக இருவரும், தங்களுக்கே உரித்தான பணியில் ஜாதிய ஆதரவாளர்களை கிண்டலடித்தனர். நெல்லையில் நடைபெற்ற ஆணவக்கொலையை அரங்கேற்றிய நபர்களைக் கடுமையாக பகடி (கேலி) செய்தனர்.
இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. 14 நிமிடங்கள் 41 நொடிகள் ஓடும் இந்த வீடியோவை இதுவரை 43 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
பலரும் இந்த வீடியோவுக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், ஜாதிய கண்ணோட்டத்தில் இருக்கும் சிலர், கோபி, சுதாகர் எந்தெந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று தேடி அதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர்களை நெட்டிசன்கள் கமென்ட்களில் வெளுத்து வருகின்றனர்.
இதனிடையே கோபி, சுதாகர் வெளியிட்டுள்ள வீடியோ இரு வீட்டு மோதலை, சமூக மோதலாகச் சித்தரிப்பதாகவும், வன்முறையைத் தூண்டும் விதமாக இருப்பதாகவும் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் (அவர் பெயரை NCC வெளியிடவில்லை) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் வன்முறையைத் தூண்டும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றும் அந்த வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். பலரும் பாராட்டி, ஷேர் செய்து வரும் ஒரு வீடியோ குறித்து கோவையில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.