திருப்பூர்: அவினாசி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான விவசாய தம்பதி படுகொலை செய்யப்பட்ட சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி அருகே உள்ள துலுக்கமுத்தூர் ஊராட்சி, ஊஞ்சப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது84) இவரது மனைவி பர்வதம் (70). இவர்களது குழந்தைகளுக்கு திருமணமாகிவிட இந்த தம்பதியினர் மட்டும் தங்களுக்குச் சொந்தமான தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இன்று காலை, வீட்டிலிருந்து இருவரும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அருகிலுள்ள விவசாயிகள் தம்பதியினரைப் பார்க்க வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது இருவரும், கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அவிநாசி போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தம்பதியின் உடல்களை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதற்கு முன்பு பல்லடம் அருகே தோட்ட வீடொன்றில் வசித்த வயது முதிர்ந்த தம்பதி மற்றும் அவர்களின் மகன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் குற்றவாளிகளை போலீசார் இன்னும் அடையாளம் காணவில்லை.
கடந்தாண்டு நவம்பரில் பல்லடத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்த நிலையில், அதே பாணியில் மீண்டும் ஒரு கொலை சம்பவம் நடந்திருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதனிடையே இத்தம்பதிக்கு பக்கத்துத் தோட்டத்து விவசாயியுடன் பிரச்சனை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கொலை சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என்றும் தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.