கோவை: கோவையில் உள்ள குளக்கரைகளில் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
கல்வி, தொழில், மருத்துவம் என பல அம்சங்களும் நிறைந்த கோவையில் தற்போது ஐடி துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் மக்கள் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரிட்து வருகிறது.
பெரிய அளவில் இங்கு சுற்றுலாத்தளங்கள் இல்லை என்றாலும், இருக்கும் சில இடங்களை மாவட்ட-மாநகராட்சி நிர்வாகங்கள் மேம்படுத்தியுள்ளன. அதன்படி, குடும்பங்களும், இளைஞர்களும் ஓய்வெடுக்கக் கூடிய சில அமைதியான இடங்களை கோவை கொண்டுள்ளது.
அத்தகைய முக்கிய இடங்களில் ஒன்றாக வாலாங்குளம், பெரியகுளம், உக்கடம் குளக்கரை போன்ற இடங்கள் உள்ளன.
சமீப ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை நகரின் பல குளங்கள் அழகாக மேம்படுத்தப்பட்டுள்ளன. நடைபாதைகள், அமர்வுக்கான நாற்காலிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காக்கள், விளக்குகள் மற்றும் பாதுகாப்பு கேமராக்கள் என இக்குளக்கரைகளில் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் மாலை நேரங்களில் குடும்பங்கள், மூத்தவர்கள், சிறுவர்கள் என அனைவரும் குளக்கரைகளில் பொழுதைக் கழிக்க வருகின்றனர்.
ஆனால், சமீபத்தில் இவ்விடங்களில் சில இளைஞர்கள் தங்களின் காதலர்களுடன் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக உக்கடம் வாலாங்குளம் மற்றும் பெரியகுளம் சுற்றுப்புறங்களில் சில ஜோடிகள் பொதுமக்கள் முன்பாக சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுடன் வருபவர்கள் மற்றும் குடும்பங்கள் பெரும் அசௌகரியம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சுற்றிப்பார்த்து, சில ஜோடிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர். “இது பொதுமக்கள் பயன்படுத்தும் இடம், குடும்பங்கள் வருவார்கள்; ஒழுக்கம் காக்கப்பட வேண்டும்” என்று போலீசார் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இந்த குளங்கள் குடும்பத்தோடு அமைதியாகச் செல்லக்கூடிய இடமாக இருக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் குழந்தைகளுக்கு தவறான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து விழிப்புணர்வு பலகைகள் அமைப்பதோடு, இங்கு போலீசாரும் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட இத்தளங்கள் அனைவருக்கும் சுத்தமான, பாதுகாப்பான ஓய்வு இடங்களாகவே தொடரவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
சில்மிஷத்தில் ஈடுபட்ட ஜோடிகளின் முகங்களை அவர்களின் தனியுரிமையை கருத்தில் கொண்டு மறைத்துள்ளோம்.

