கோவை: பயணிகளை ஏற்றுவதில் உருவான ‘வசூல்’ போட்டியால், அரசு-தனியார் பேருந்து ஊழியர்கள் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளி மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காந்திபுரம், மேட்டுப்பாளையம் சாலை மற்றும் அவிநாசி சாலைகளில் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் இயங்கி வருகின்றன.
சமீபகாலமாக தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நேரக் கணக்கீடு (Timing) மற்றும் பயணிகளை ஏற்றுவதில் இவர்களுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது.
உரிய நேரத்திற்குப் பேருந்தை இயக்கவில்லை என்றால், வருமானம் குறையும் என்ற நோக்கில் ஒரு பேருந்தை மற்றொரு பேருந்து முந்திச் செல்வதும், வழிமறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
மோதல்
இந்நிலையில் நேற்று அவிநாசி சாலை ஹோப் காலேஜ் பகுதியில், சிங்காநல்லூரை நோக்கித் திரும்பும் இடத்தில் அரசுப் பேருந்தும், தனியார் மினி பேருந்தும் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்றன.
இதில் ஆத்திரம் அடைந்த இருதரப்பு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், பேருந்துகளைச் சாலையின் குறுக்கே நிறுத்தி விட்டு நடுரோட்டில் இறங்கி மோதலில் ஈடுபட்டனர்.
சினிமா பாணியில் ஒருவரை, ஒருவர் சட்டை காலரைப் பிடித்துத் தள்ளி மோதிக்கொண்ட நிலையில், அந்தப் பகுதியில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. ஆனால், இதனைப் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் ஆவேசமாக மோதிக் கொண்டதை அவ்வழியாகச் சென வாகன ஓட்டிகள், செல்போனில் படம் பிடித்தனர்.
தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவர்களை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

