அப்பா ஷூட்டிங் போயிருக்காரு… கோவையில் ரோபோ சங்கர் மகள் பேட்டி!

கோவை: தனக்கு குழந்தை பிறந்த உடன் அப்பாவை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு காசிக்கு செல்ல வேண்டும் என கூறி இருந்தேன், ஆனால் நடந்தது வேறு என்று கோவையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா வேதனை தெரிவித்துள்ளார்.

மறைந்த பிரபல நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் விளம்பர நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் சார்பில் சாய்நாத் மகாராஜ் கங்க ஆராத்தி எனும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கோவை கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள சிறுதுளி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் வனிதா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடலை வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்திரஜா சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எனது முதல் தயாரிப்பில் சாய்பாபாவிற்கு பாடல் வெளியிட்டுள்ளேன். பாடலை என் கணவர் கார்த்திக் எழுதியுள்ளார். அப்பாவிற்குப் பிறகு கணவர் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறார்.

அனைவரையும் சிரிக்க வைக்க வேண்டும் என தனது அப்பா சொல்லிக் கொடுத்தார். அவர் விட்ட இடத்தில் இருந்து இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். அப்பா எங்களுக்காக மேலிருந்து ஆசிர்வதிப்பார்.

எனக்கு குழந்தை பிறந்த பிறகு முதலில் காசிக்கு தான் செல்ல வேண்டும் என அப்பாவிடம் கூறினேன். ஆனால் அவர் இறந்த பிறகு அவரை குடுவையில் அடைத்து காசிக்கு கொண்டு சென்றது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

அப்பா எங்களுடன் இல்லை என நினைக்கவில்லை அவர் படப்பிடிப்புக்கு நடிக்கச் சென்றுள்ளார் என்று தான் நினைத்து நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்று உருக்கமாகக் கூறினார்.

Recent News

Video

Join WhatsApp