கோவை: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை வருகின்ற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே ஓணம் பண்டிகை கொண்டாட துவங்கப்பட்ட நிலையில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன.

அதன்படி கோவையிலும் பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்வுகள் துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா தனியார் கல்லூரியில் இன்று உற்சாகமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ மாணவிகள் கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடை அணிந்து பண்டிகையை கொண்டாடினர். கல்லூரி வளாகத்தில் பூக்கோலமிட்டு திருவாதிரை களி நடனமாடி மகாபலி மன்னனை வரவேற்றனர்.

மேலும் செண்டை மேளம் இசையுடன் மாணவ மாணவிகள் உற்சாக நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அதனை தொடர்ந்து டிஜே போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.