கோவை: திமுக பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளும் முறைகேடுகளும் செய்துள்ளது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர், திமுக அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக பிரதமர் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களைப் பற்றி பேசியதாக பொய்யான கருத்துக்களை கூறி வருகிறார் என தெரிவித்தார்.
சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது,
தமிழக அரசு உள்ளாட்சித் துறையில் பல்வேறு ஊழல்கள் செய்திருப்பதாகவும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது, மேலும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மீதும் ஊழல் புகார்கள் வந்துள்ளது, திமுக அரசின் இந்த ஊழல் புகார்களை மறைக்கும் விதமாக பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் தமிழர்கள் குறித்து பேசியதாக பொய்யான தகவல்களை முதல்வர் கூறி வருகிறார்.
கடந்த காலங்களில் திமுக தலைவர்கள் பீகார் மக்களை கொச்சையாக பேசியுள்ள வீடியோ காட்சிகள் உள்ளன. திமுக கட்சியினர் தான் பீகார் மக்களை விமர்சித்து பேசியதாக பிரதமர் கூறினார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை திமுக எதிர்த்து வருகிறது. இது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான், திமுக பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளும் முறைகேடுகளும் செய்துள்ளது. அவை அனைத்தும் இந்த நடவடிக்கையின் மூலம் சீர் செய்யப்படும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் படி இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என யாரும் கூற முடியாது. யாருடைய வாக்குரிமையும் பறிக்கப்படவில்லை, அனைவரது வாக்குரிமையும் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.


 
                                    
