கோவை: எடப்பாடி பழனிசாமியின் கட்சிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு நான் செல்ல விரும்பவில்லை. எதற்காக மற்றொரு கட்சியின் பிரச்னையில் தலையிட வேண்டும் என்று கோவையில் அண்ணாமலை பேசியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கோவை-ராமநாதபுரம் இடையே, ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் ரயில் சேவை தொடங்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
கரூரிலிருந்து 99 கிலோ மீட்டருக்கு ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்படவில்லை, தொழில்துறையை மையமாகக் கொண்ட இப்பகுதியை மத்திய அரசு ஒருபோதும் நிராகரிக்காது.
நேற்று வெளியான Cvoter கணிப்பில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு 27 சதவீதம் மக்கள் தான் அவரை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது தெரியவருகிறது. எவ்வளவு மோசமான முதலமைச்சராக இருந்தாலும், 43 சதவீத மக்கள் ஆதரவேனும் இருக்கும், நான்கு பேரில் மூன்று பேர் அவரை வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
இதையே தான் எங்களுடைய கள ஆய்வும் சொல்கிறது. தமிழகத்தில் ஒரு கட்சி ஜெயிக்க வேண்டும் என்றால் ஐந்து மண்டலங்களில் மூன்று மண்டலங்களிலை ஜெயிக்க வேண்டும்.
கூட்டணியைப் பற்றி எந்த வார்த்தையும் நான் இங்கு பேச விரும்பவில்லை; அதுகுறித்து உள்துறை அமைச்சர் நிச்சயம் கூறுவர். என்னை பொருத்தவரை தமிழகம் நன்றாக இருக்க வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சி தங்கு தடையின்றி வளர வேண்டும். எனக்கு எந்த ஒரு கட்சியின் மீதோ தலைவரின் மீதோ தனிப்பட்ட கோபம் கிடையாது. நான் யாருக்கும் எதிரானவனும் கிடையாது. அதேபோல தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விரைவில் பார்ப்பீர்கள்.
பிரதமர் மோடி ஏப்ரல் 6ல் ராமேஸ்வரம் வருகிறார். அங்கு பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார். அதன் பிறகு ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார். தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய முதல் விசிட்டாக இருக்கிறது. அரசியலில் என்ன நடக்க வேண்டும் எப்பொழுது நடக்க வேண்டும் என்பதெல்லாம் சரியான நேரத்தில் நிச்சயம் நடக்கும்.
நான் யாரையும் கடுமையாக விமர்சிக்கவில்லை, கருத்துகளை கருத்துகளாகவே முன் வைத்திருக்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி முதல் முதலமைச்சர் வரை என்னுடைய விமர்சனங்களை முன் வைத்திருக்கிறேன்.
டெல்லிக்கு செல்லும் விமானத்தில் யார் ஏறினாலும் அவர்கள் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்கவே செல்கிறார்கள் என்று மீடியாக்காரர்கள் கூறுகிறார்கள். செங்கோட்டையன் பயணத்தை எடுத்துக் கொண்டாலும், அதைத்தான் செய்தார்கள். பா.ஜ.க.வுக்கு திரை மறைவில் செய்ய வேண்டிய காரியங்கள் எதுவுமே இல்லை. நாங்கள் எப்போதும் வெளிப்படையாகவே இருக்கிறோம்.

விஜய் தன் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார். அதை நான் வரவேற்கிறேன். தமிழ்நாட்டிற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 39,333 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்தே உங்களுக்கு தெரிந்திருக்கும் சரித்திர கணக்கு ஏமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.
கிராம சபை கூட்டம் என, மக்களை அழைத்து மோடிக்கு எதிராக கொடிபிடிக்க வைக்கிறார்கள்.
மற்ற கட்சிகள் முதலமைச்சர் வேட்பாளர்களை கூறிவிட்டார்கள், ஆனால் பா.ஜ.க.வில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதே தெரியாது. அப்படி இருந்தும் கட்சி நான்காவது இடத்தில் வந்திருக்கிறது என்றால் இதை சரித்திரமாக தான் பார்க்கிறோம்.
இ.பி.எஸ் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர். அவரது கட்சிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு நான் செல்ல விரும்பவில்லை. எதற்காக மற்றொரு கட்சியின் பிரச்னையில் தலையிட வேண்டும். அது எங்கள் வேலையே கிடையாது.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.