கோவை: YWCA பள்ளி மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானதால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், பெற்றோர்களோடு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வ.உ.சி மைதானத்திற்கு எதிரே YWCA என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த நிலையில், தற்போது 170 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதனிடையே அவினாசி சாலை மேம்பாலப் பணிகளுக்காக பள்ளியின் நிலத்திலிருந்து மூன்று சென்ட் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 30 சென்ட் நிலத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதனிடையே இடப்பற்றக்குறை, நிர்வாக சிக்கல் காரணமாக பள்ளியை மூடுவதாக நிர்வாகம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளியை மூட எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளியை முற்றுகையிட்டனர்.
இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் பயனில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், இன்று மாணவர்களுடன் வந்த பெற்றோர் பள்ளியின் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், “திடீரென பள்ளியை மூடினால் எங்கள் கல்வி பாதிக்கப்படும். எங்கள் பள்ளியை மூடக்கூடாது. எங்கள் பள்ளிக்காக நாங்கள் போராடுவோம்” என்றனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தி சாலை மறியலைக் கலைத்தனர்.