கோவை: குடிபோதையில் குழிக்குள் லாரியை இறக்கிய டிரைவர் நிதானமின்றி வாகனத்தில் மயங்கிக் கிடக்கும் காட்சிகள் வெளியாகி கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போலீசார் போக்குவரத்தை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக குடிபோதையில் வாகனங்களை இயக்கும் ‘குடி’மகன்களுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர்.
இதனிடையே கோவை இருகூர் தண்ணீர் டேங்க் அருகே லாரி ஒன்று சென்று உள்ளது. அந்த சாலையின் ஓரத்தில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழி ஒன்று இருந்தது.
அதனை அறியாமல் குடிபோதையில் வந்த கூரியர் லாரி டிரைவர் குழிக்குள் லாரியை இறக்கியதில் விபத்து ஏற்பட்டது. போதையில் இருந்த டிரைவர் செய்வது அறியாது நிதானம் இழந்து அதே லாரியில் படுத்து உறங்கினார். மேலும் அந்தச் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவரை எழுப்பியது போதும் எழ முடியாமல் நிதானமிழந்த நிலையில் இருந்தார். இந்த சம்பவத்தில் வாகன ஓட்டிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மது போதையில் லாரியை ஒட்டி விபத்தை ஏற்படுத்தி மயங்கிக் கிடக்கும் டிரைவரின் வீடியோ காட்சிகள் வெளியாகி கோவையில் வைரலாகி வருகிறது. இதுபோல் மது அருந்திவிட்டு சரக்கு மற்றும் கனரக வாகனங்களை இயக்குவோர் மீது நடவடிக்கைகளை கோவை மாநகர போலீஸ் தீவிரப்படுத்த வேண்டும் என்று நெட்டிசன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.