கோவை: கோவையில் மது போதையில் ரசம் பொடிக்கு பதிலாக சாணி பவுடரைக் கலந்து சாப்பிட்ட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குனியமுத்தூர் பிகே புதூர் மதுரைவீரன் கோயில் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி (52). தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது.
கடந்த 22ம் தேதி பெரியசாமி மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும், அவர் ரசம் சமைத்ததாக தெரிகிறது. அப்போது பெரியசாமி ரசத்தில் ரசம் பொடிக்கு பதிலாக வீட்டில் இருந்த சாணி பவுடரை எடுத்து அதில் தெரியாமல் கலந்துள்ளார்.
பின்னர் ரசத்தை சாப்பிட்ட போது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு பார்த்துள்ளார். அப்போது தான் அவருக்கு ரசம் பொடிக்கு பதிலாக சாணி பவுடரை ரசத்தில் கலந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பெரியசாமி சாப்பிட்டதை வாந்தி எடுத்துள்ளார்.
வாந்தி எடுத்ததால் சாணி பவுடர் எதுவும் செய்யாது என்று நினைத்து மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 25ம் தேதி பெரியசாமிக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



