கோவை: கோவையில் அரசு மருத்துவமனை முன் இளம்பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
கோவை அரசு மருத்துவமனை முன் இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மது போதையில் ரகளை செய்து கொண்டிருந்தார். நடுரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாகச் செல்லும் வாகனங்களை வழிமறித்தார்.
அதைத் தட்டி கேட்டவர்களை இந்தியில் திட்டி உள்ளார். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மது போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த பெண்ணிடம் விசாரணை செய்தனர். ஆனால் அந்த பெண்ணால் எந்த பதிலும் கூற முடியாமல் அவர் தள்ளாடினார்.
இதனால் போலீசார் அந்த பெண்ணை சாலை ஓரமாக அமர வைத்துச் சமாதானப்படுத்தி அறிவுரை கூறினர். இதனால் அந்த பெண் அமைதியாக அங்கு அமர்ந்து கொண்டார்.
இதையடுத்து போலீசார் போக்குவரத்தைச் சரி செய்து அங்கிருந்து சென்றனர். காலை நேரத்தில் இளம் பெண் ஒருவர் மது போதையில் தள்ளாடியாததால் அரசு மருத்துவமனை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




