கோவை: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கிவிட்டு, அங்கிருந்த நகையைக் கொள்ளையடித்துச் சென்ற பெண் ஒருவரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ன்டவர் கந்தவேல். கடந்த 8ம் தேதி கந்தவேலும், அவரது மனைவியும் வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் அவரது பாட்டி சரஸ்வதி (96) என்பவர் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் மூதாட்டியைத் தாக்கி மயக்கமடையச் செய்ததோடு, பீரோவிலிருந்த 8.5 பவுன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றார்.
பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது சரஸ்வதி முகம், தாடை, நெஞ்சு பகுதியில் காயத்துடன் மயக்க நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கந்தவேல் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் நிர்மலாதேவி மற்றும் உதவி ஆய்வாளர் சபிதா, தலைமைக் காவலர்கள் பிரபாகரன், செந்தில்குமார், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த பெண் குறித்து விசாரணை நடத்தியதில், அவர் சிவானந்தபுரம் 4வது வீதியில் வசித்து வரும் தீபா (37) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவர் திருடிய 8.5 பவுன் நகையை மீட்டனர். மேலும், தீபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
துரிதமாகச் செயல்பட்டு திருட்டில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த தனிப்படை போலீசாரை காவல் ஆணையர் சரவண சுந்தர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.
Stop Worrying – Install Mobile-Connected CCTV for Seniors



