கோவை: தடாகம் அருகே தோட்டத்து கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த மாட்டு தீவனங்களை காட்டு யானை தின்று சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னிமடை, தாளியூர், உள்ளிட்ட பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிக அளவு காணப்படுகிறது.
மலை மற்றும் வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் காட்டு யானைகளும் காட்டு பன்றிகளும் விளை நிலங்களை சேதப்படுத்தி செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தடாகம், பன்னிமடை ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்து உள்ளது. அப்போது பன்னிமடை பகுதியில் தனியார் தோட்டத்து கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த மாட்டு தீவனங்களை கொட்டகைக்குள் சென்று தின்றுள்ளது.
காட்டுயானை கொட்டகை கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று மாட்டுத்தீவனங்களை தின்றது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்பொழுது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
நாள்தோறும் ஒற்றைக் காட்டுயானை அப்பகுதியில் உலாவி வருவதாகவும் வனத்துறையினர் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



