கோவை: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் Blue Cubs திட்டத்தின் கீழ், எப்.சி மெட்ராஸ் (FC Madras) அகாடமி நடத்தும், எமெர்ஜிங் ஸ்டார்ஸ் லீக் (Emerging Stars League) கால் பந்து தொடர் கோவையில் இன்று தொடங்கியுள்ளது.
இந்த தொடர், இன்று முதல் வரும் மே மாதம் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலை ஓனாப்பாளையத்தில் உள்ள ஜி.ஜி.எஸ்.ஏ ஸ்போர்ட் அரினா (GGSA Sportz Arena) மைதானத்தில் நடைபெறும் போட்டியில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. 10 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகள் தனித்தனியே ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நடைபெறுகிறது.
இதுகுறித்து எப்.சி மெட்ராஸ் அகாடமியின் இயக்குனர் விக்ரம் நனிவாடேகர், டெக்னிகல் டைரக்டர் வெங்கடேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவையில் எப்.சி மெட்ராஸ் லீக் தொடங்க உள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
இந்த போட்டியில் கோவை, சேலம், கொச்சி உள்ளிட்ட நகரங்களிலிருந்து
10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 160 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த புட்பால் டோர்னமென்ட் மூலம் இளம் வீரர்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும். பல்வேறு அணிகளுடன் விளையாடும் போது நிறைய நுட்பங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். FC Madras தேசிய அளவில் நல்ல அகாடமியாக உள்ளது. இந்த தொடர் இன்னும் பெரிய அளவில் செல்ல வேண்டும்.
இந்தியாவில் புட்பால் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு சில அகாடமிகள் மட்டுமே இருந்தன. இப்போது பல்வேறு அகாடாமிகள் வந்துவிட்டதே இதற்கு உதாரணம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.