கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்த பெண் நோயாளியிடம் நகை திருட்டில் ஈடுப்பட்ட ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்….
கோவை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 20 ஆம் தேதி பாப்பநாயக்கன் பாளையம், பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலம் இல்லாமல் அவர் மறுநாள் 21 ஆம் தேதி மருத்துவமனையில் இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பெண்ணின் கழுத்தில் போடப்பட்டிருந்த தங்க காசு உடன் கூடிய தாலி மாயமாகி இருந்துள்ளது.
இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து காவல்துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவமனையின் ஒப்பந்த ஊழியர் ராஜசேகர் திருடியது தெரிய வந்தது. இடைத்தொடர்ந்து ராஜசேகரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.